ராஜேந்திர சோழனுக்கு, இளவரசர் பட்டம் சூட்டிய, ஆயிரமாவது ஆண்டு விழாவை, 2012 டிச., 27ம் தேதி, அவரது ஜென்ம நட்சத்திரமான மார்கழி திருவாதிரை நாளில் கொண்டாட, தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என, வரலாற்று ஆர்வலர்கள், பொதுமக்கள், வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கி.பி., 850ம் ஆண்டு, திருச்சி, உறையூரை தலைநகராக கொண்டு, விஜயாலய சோழன் காலத்தில், உருவாக்கப்பட்ட சோழப்பேரரசு, தஞ்சாவூர், கங்கைகொண்ட சோழபுரம் என, இரண்டு தலைநகர் மாற்றங்களுடன், கி.பி., 1,279 வரை ஆட்சி செய்த, கடைசி சோழ மன்னன் மூன்றாம் ராஜேந்திர சோழன் ஆட்சியில் நிறைவடைந்தது. தென்னிந்தியாவில் மிகச்சிறந்த ஆட்சி அமைப்பை ஏற்படுத்திய, சோழர் ஆட்சி காலம், "தமிழகத்தின் பொற்காலம்' என்றால் அது மிகையாகாது. ஆட்சி அதிகாரம், நீதி, நிர்வாகம், சமயம், பக்தி, இலக்கியம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கிய சோழ பேரரசில், தஞ்சை பெரிய கோவிலை கட்டிய (கி.பி., 985-1,014), ராஜராஜசோழன் மகனாக, மார்கழி திருவாதிரை நாளில் பிறந்த ராஜேந்திர சோழன், அவரது தந்தை உயிரோடு இருக்கும் போதே, இளவரசராக முடிசூட்டப்பட்டார்.
"தாய் எட்
டடி பாய்ந்தால், குட்டி பதினாறு அடி பாயும்' என்ற பழமொழிக்கு ஏற்ப, ராஜேந்திர சோழன் பதவி ஏற்கும் வரை, தெற்கே இலங்கை முதல், வடக்கே கிருஷ்ணா மற்றும் துங்கபத்ரை வரை பரவியிருந்த சோழ பேரரசு, வடக்கே கங்கை கரை, கிழக்கே கடல் கடந்து கடாரம் வரை விரிவடையும் வகையில், உலக நாடுகள் வியக்கும்படி, மிகப்பெரிய கப்பல் படையை ராஜேந்திர சோழன் பெற்றிருந்தார். கங்கை கரை வரை,படையெடுத்து, வடபுலத்து மன்னர்களை வெற்றி கொண்டதன் அடையாளாக, கங்கைகொண்ட சோழபுரம் என்ற புதிய தலைநகரை உருவாக்கி, அங்கு தஞ்சாவூர் பெரிய கோவில் வடிவமைப்புடன் கூடிய, பிரகதீஸ்வரர் கோவிலையும் கட்டினார். இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள, 13.5 அடி உயரமும், 60 அடி சுற்றளவும் கொண்ட சிவலிங்கம் தான், உலகிலேயே மிகப்பெரிய சிவலிங்கம் என, போற்றப்படுகிறது. வேறு எந்த கோவிலிலும் இல்லாத வகையில், இக்கோவில் கருவறை சுவரில் பதிக்கப்பட்டுள்ள சந்திரகாந்த கல், வெயில் காலத்தில் குளிர்ச்சியையும், குளிர் காலத்தில், இதமான வெப்பத்தையும், வெளியிட்டு கொண்டிருக்கிறது. "கடல்புறா' என்றழைக்கப்பட்ட, மாமன்னன் ராஜேந்திர சோழன், சோழ பேரரசின் இளவரசராக முடிசூட்டப்பட்ட, ஆயிரமாவது ஆண்டு விழாவை, அவரது ஜென்ம நட்சத்திரமான வரும் டிச., 27ம் தேதி, மார்கழி திருவாதிரை நாளில், கங்கைகொண்ட சோழபுரத்தில், அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என, வரலாற்று ஆர்வலர்கள், பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.